புதுச்சேரி,நவ.9- தொண்டமான் நத்தம் பகுதியில் கண்ணாடி தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி வேலை வழங்காததை கண்டித்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியை அடுத்து தொண்டமான் நத்தம் பகுதியிலுள்ள இந்துஸ்தான் கண்ணாடி தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். ஊதிய உயர்வு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது நிரந்தர மாக பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். நிர்வாகத்தின் இந்த அடாவடி போக்கை கண்டித்து தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக போராடி வந்தனர். இதனையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணி நீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனாலும் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில், ஹிந்துஸ்தான் தொழிற்சாலை முன்பு நவ.9 அன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐடியு கவுரவத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பிரதேசத் தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன் கொளஞ்சி யப்பன், வடிவேல், மணிபாலன், ராஜ்குமார், முகிலன், சௌந்தர்ராஜன் மாணிக்கம் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.