பெரம்பலூர், ஏப்.24 - பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சனிக்கிழமை பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ பிரபாகரன் மற்றும் நகர, பேரூர் வார்டு தேர்தல் பொறுப்பாளர் மு.இராஜகாந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நகர, பேரூர் உட்கட்சித் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். நடைபெற்ற தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பாடாலூர் பகுதியில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க ரூ.150 கோடி, வேப்பந்தட்டை ஒன்றியம் எறையூர் சர்க்கரை ஆலை வளர்ச்சி மேம்பாட்டுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு, வேப்பந்தட்டை ஒன்றியம், வெள்ளாற்றை மையமாகக் கொண்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் 15 ஊரக பகுதிகளில் அமைக்க ரூ.11.75 கோடி ஒதுக்கீடு, கோணேரிப்பாளையம் கிராமத்தில் கோணேரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைக்க ரூ.4 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரூ.172.75 கோடி மதிப்பீட்டில் அறிவித்த தமிழக முதல்வர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கழக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பரிந்துரை செய்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.