நாகப்பட்டினம், மார்ச் 31 - எட்டுக்குடி ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் சுப்ரமணிய சுவாமி கோயில் குளக்கரை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு மதுரையில் நடப்பதையொட்டி, இப்பகுதியில் 23 செங்கொடிகள் அடங்கிய கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது. அக்கொடி கம்பத்தை புதனன்று மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனை கண்டித்தும் சேதபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிகரன், கட்சி கிளை உறுப்பினர் பாலசுப்ரமணியன், வாலிபர் சங்க கிளை செயலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.