வேதாரண்யம், பிப்.1 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி, ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர், நீட் தேர்வில் 465 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 8-ஆம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றார். இவருக்கு மருத்துவம் படிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதே பள்ளியில் பிளஸ்-2 படித்த மருதூர் கிராமத்தை சேர்ந்த பிறைமதி, நீட் தேர்வில் 293 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்த சூர்யா, அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து, நீட் தேர்வில் 287 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆயக்காரன்புலம் 1ஆம் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுமரன். ஆயக்காரன்புலம் 2 ஆம் சேத்தி நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர், நீட் தேர்வில் 288 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. தோப்புத்துறை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த பெரியகுத்தகை கிராமத்தை சேர்ந்த அபிநயா, நீட் தேர்வில் 330 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இவருக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.