கும்பகோணம், மார்ச் 4- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் வசந்த்- உமா ஆகியோர் மகள் கலையரசி. இவர், இளநிலை பி.காம் படித்துள்ளார். திருச்சேறையைச் சேர்ந்த ரவி - சாந்தி மகன் அஜித்குமார் ஆகியோர் 4 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், அஜித்குமார் கட்டிடப் பொறியாளராக பணியாற்றிவந்த நிலையில், கலையரசி வீட்டிற்கு பெண் கேட்டு முறைப்படி சென்று உள்ளார். ஆனால் பெண் தரப்பில் கொடுக்க விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய , நாச்சியார் கோவில் அலுவலகத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். இருவரையும் விசாரித்த நிலையில், இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாச்சியார்கோலில் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்து சம்பந்தப்பட்ட இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், அஜித்குமார் - கலையரசி, கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறும் சிபிஎம் அகில இந்திய மாநாட்டிற்கு நிதியாக ரூ.3000 அளித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, ஆறுமுகம், திருவேங்கடம், ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் மணமக்களை வாழ்த்தினர்.