சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற தீயணைப்பு வீரருக்கு 7 ஆண்டு சிறை
திருவில்லிபுத்தூர்,பிப்.10- சாத்தூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராம ராஜ் (வயது 65). ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை ஊழியர் ஆவார். ராமராஜ் கடந்த 24- 8- 2021 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்து கடைக்கு சென்று ஊறுகாய் வாங்கி வருமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.திருவில்லிபுத்தூரில் உள்ள சிறார் பாலியல் குற்றத்தடுப்பு அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த், குற்றம் சாட்டப்பட்ட தீயணைப்புபடை ஓய்வு பெற்ற ஊழியர் ராம ராஜ்க்கு 7 வருடம் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.கலா ஆஜரானார்.
ஒட்டன்சத்திரத்தில் பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது
ஒட்டன்சத்திரம், பிப்.10- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலை யத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த சகாயராஜ் ,தனது மனைவி அனிதாவுடன் (37) உறவினர் வீட்டு திருமணத்தி ற்கு வந்தார். திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் கோவை செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலை யத்திற்கு வந்தனர். அப்போது அனிதா அணிந்திருந்த 14பவுன் நகை களை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர். பேருந்து ஏறியவுடன் நகையை பார்த்தபோது அது திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிதா ஒட்டன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கவுசல்யா மற்றும் போலீசார் அப்பகுதி யில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களின் பதிவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகையை திருடியது வத்தலக்குண்டு பண்ணப்பட்டியை சேர்ந்த சத்யா(வயது 44), மதுரையை சேர்ந்த முத்துமாரி(வயது 35), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணி(வயது 31) என்பது தெரியவந்தது. இவர்கள் பேருந்து நிலையம் மற்றும் கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தனியார் பேருந்து மோதி மூதாட்டி பலி
கடமலைக்குண்டு, பிப்.10- தேனி மாவட்டம், கண்டமனூர் புதுகாலனியை சேர்ந்த வர் சின்னமுனியாண்டி. இவரது மனைவி சித்ராயி (வயது 70) வெள்ளிக்கிழமையன்று கண்டமனூர் வடக்கு தெரு பேருந்து நிறுத்தம் அருகே தேனி செல்லும் தனியார் பேருந்தில் ஏறுவதற்காக வேகமாக ஓடினார். மூதாட்டியை கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை இயக்க தொடங்கினார். இதில் பேருந்தில் முன்புறம் மோதி கீழே விழுந்த மூதாட்டியின் மேல் சக்கரங்கள் ஏறி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதால் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். ஆனால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்டமனூர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ராம்மோகன் (32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடியில் கோஷ்டி மோதல்: 9 பேர் மீது வழக்கு பதிவு
தேனி, பிப். 10- தேனி மாவட்டம், போடி ஜே.கே.பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராசு மகன் ஜெயராம் (47). இவரது மகளை பக்கத்து வீட்டை சேர்ந்த முத்துராஜ் மகன் பிரபு (26) என்பவர் காதலித்து வந்துள்ளார். வேறு வேறு சமூகம் என்பதால் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்த நிலையில் ஜெயராம் தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதில் இரு தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து ஜெயராம் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர் பிரபு, காளிதாஸ் மகன் விக்னேஷ்குமார் (27), சுதர்சன், சந்துரு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிரபு, விக்னேஷ் குமார் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபு கொடுத்த புகாரின் பேரில் ஜெயராம், இவரது மகன் விஷ்வா, ராசு மகன் கனகராஜ், தாமஸ் மகன் அசோக்குமார், கனகராஜ் மகன் சுதாகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.