districts

பட்டியலின மாணவர்களை கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க  தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

மதுரை, ஏப்.4-  மதுரை மாவட்டம் காரைகேணியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல், எம்.வீரபட்டியை சேர்ந்த சிவசந்திரன்  மகன் அன்புதாஸ்.   இவர்கள் இருவரும் திருமங்கலம் தாலுகா அச்சம்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள்  அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்கள் இருவர் அச்சம்பட்டியில்  இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலம்பட்டிக்கு சென்று அங்குள்ள கடையில் மிட்டாய் வாங்கியுள்ளனர். கடையில்  கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. கடைக்காரர் திடீரென இந்த இரு மாணவர்களையும் மிட்டாய் திருடிவிட்டதாகக்கூறி , கூட்டத்தைக் கூட்டினார்.  கூட்டத்தில்  இருந்தவர்கள் மாணவர்களிடம்  தீர விசாரிக்காமல் கடை உரிமையாளர் சொன்னதை கேட்டு மாணவர்களை கட்டி வைத்து அடித் துள்ளனர். ஆதி திராவிடர் விடுதி  காப்பாளர் விஜயன் ஆலம்பட்டிக்கு வந்து மாணவர்கள் இருவரையும் விடுதியை விட்டு நீக்கி விடுவதாக கூறியுள்ளார்.  இதனையறிந்த  சக்திவேலின் உறவினர் ஒருவர் மாணவர்களை தாக்கியவர்களிடம்  சமாதானம் பேசினார். இதையடுத்த மாண வர்கள் விடுவிக்கபட்டுள்ளனர். இந்த செய்தி ஊடகம் ஒன்றில் வெளியானதை தொடர்ந்து திருமங்கலம் தாலுகா  காவல்துறை அவசர அவசரமாக கிராம நிர்வாக அலுவலரிடம்  புகாரை பெற்று கொண்டு, முறையாக விசாரிக்காமல் தாங்கள் விரும்பிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்ட தகவல் அறிந்த. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, மாவட்டத் துணைத் தலைவர் வி.பி.முருகன், ஆதித்தமிழர் கட்சி விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கருப்பசாமி, மதுரை தெற்கு மாவட்டச்  செயலாளர் ஆனந்த  மகாலெட்சுமி ஆகியோர் ஆலம் பட்டி கிராமம், அச்சம்பட்டி பள்ளி, ஆதி திராவிடர் நல விடுதி, திருமங்கலம் காவல் நிலையம்  ஆகிய இடங்களில் திங்களன்று கள விசாரணை நடத்தினர்.  இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளரும் மாணவர்களை தாக்கியவர்கள் மீது  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று  மாநிலத் தலைவர் செல்லக் கண்ணு வலியுறுத்தினார்.