கடலூர் மாவட்டத்தில் செப்.27ல் 16 மையங்களில் சாலைமறியல் இடதுசாரி கட்சிகள் கூட்டத்தில் முடிவு
கடலூர்,செப்.23- கடலூர் மாவட்டத்தில் செப் 27 அன்று 16 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தன வேல்,சிபிஎம் மாநிலக்குழ உறுப்பினர் கோ.மாதவன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த மசோதாவை திரும்பபெற வலி யுறுத்தியும் தலைநகர் புதுதில்லியில் 11 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆகவே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் செப் 27 அன்று பாரத் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றன. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், காட்டுமன்னார்குடி, திரு முட்டம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, நெல்லிக்குப்பம், அண்ணா கிராமம், காடாம்புலியூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகள் கூட்டமைப்பு துண்டறிக்கை விநியோகம்
குடவாசல், செப்.23- அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ள முழு அடைப்பு, சாலை-ரயில் மறியல் போரா ட்டத்தை விளக்கி நன்னிலம் ஒன்றியத்தில் அனைத்து விவசாய சங்கத்தின் ஒருங்கிணை ப்பு கூட்டமைப்பு சார்பில் துண்டறி க்கை விநியோகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளரும், அனைத்து விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமையில், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் கே.தமிழ்செல்வி, கவிஞர் வரத.வசந்தராஜன் உள்ளிட்டோர் 27 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு வெற்றி பெற வேண்டி விவசா யிகள், விவசாயத் தொழிலாளர்கள், வர்த்தகர் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.
உதவித்தொகைக்கான அடையாள அட்டைகேட்டு வாலிபர்கள் மனு
புதுச்சேரி, செப்.23- முதியோர் உதவித்தொகைக்கான அடையாள அட்டைபெற அலைக் கழிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி உழவர்கரை நகரகுழு தலைவர் நிலவழகன்,செயலாளர் சஞ்சைசேகரன் ஆகியோர் புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது : புதுச்சேரியில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் புதுச்சேரி அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.புதியதாக பொறுப்பேற்ற அரசு கூடுதலாக 10ஆயிரம் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் உதவித்தொகை கேட்டு எண்ணற்ற பயனாளிகள் விண்ணப்பித்து, கடந்த நான்கு ஆண்டுகளாக காத்திருந்தனர்.இந்நிலையில் புதியதாக பொறுபேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு சாதகமான பயனாளிகளுக்கு மட்டும் அடையாள அட்டைகளை வழங்குவதும், ஏனைய பயனாளிகளை அதிகாரிகள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள சொல்வதும், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பாரபட்சத்தோடு பயனாளிகளை அலைகழிக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.எந்த ஒரு அரசின் திட்டமாக இருந்தாலும் அரசியல் வேறுபாடின்றி அனைவருக்கும் சமமாக கொண்டு சேர்த்திட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்பட வேண்டும் என்பதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது. துறைச்செயலாளர் நேரடியாக தலையிட்டு பயனாளிகள் அனைவருக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தில் அடையாள அட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு 167பேர் மனு
கள்ளக்குறிச்சி ,செப்.23- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட9 மாவட்டங்களில்உள்ளாட்சிதேர்தல்வருகிறஅக்டோபர்மாதம்6 மற்றும் 9-ந்தேதிகளில்2கட்டங்களாகநடைபெறஉள்ளது. இதற்கானவேட்புமனுதாக்கல்கடந்த15-ந்தேதிதொடங்கி புதன்கிழமை நிறைவடைந்தது. ஆர்வத்துடன் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 180 பதவிகளுக்கு 1209 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான 412 பதவிகளுக்கு 2256 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 3162 பதவிகளுக்கு 10,256 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு 13,878 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் வியாழக்கிழமை பரிசீலிக்கப்பட்டன. தகுதியற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன,. மனுக்களை திரும்பப்பெற்றுக்கொள்ள வரும் 25 ஆம் தேதி கடைசி நாளாகும்.
கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
திருவண்ணாமலை,செப்.23-திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்துவட்டு செல்கின்றனர். ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் நின்று சாமிதரிசனம் செய்தனர். பிற்பகல் 1மணியளவில் வாலிபர் ஒருவர் ராஜகோபுரத்தின் மீது வெளிப்புறம் வழியாக சுமார் 20 அடிக்குமேல் ஏறிஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார். இதைப்பார்த்தவர்கள் கோவிலின் ராஜகோபுர பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராஜகோபுரத்தின் கீழ்பகுதியில் நின்றவாறு அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது அவர், நான் புதியதாக வாங்கிய செல்போனை ஒருவர் எடுத்து சென்று தலைமறைவாகி விட்டார். அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தராவிட்டால் ராஜகோபுரம் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அந்த நபரிடம் சுமார் 1 மணி நேரம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் ராஜகோபுரத்தின் மேல் ஏறி சென்று அவரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வர்சிகுடி வடக்கு கூவம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவர், கடந்த 3 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலையில் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.12 லட்சம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி,செப்.23- கள்ளக்குறிச்சி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப் ்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 3,773 பதவிகளுக்கு வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் நடராஜன் தலைமையில் சிறப்பு துணை ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கொண்ட பறக்கும் படையினர் கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் அம்மன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தியபோது, அதில் கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடி உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காரில் வந்த சேலத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், வெள்ளிப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து காரில் எடுத்து வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 19 கிலோ வெள்ளிப்பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்தனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறு முகம் உடனிருந்தார். இதேபோல் தனி வட்டாட்சியர் நடராஜன் தலைமையிலான பறக்கும்படையினர் கள்ளக்குறிச்சியை அடுத்த அகரக் ்கோட்டாலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் ராயபுரத்தை சேர்ந்த கண்ணுசாமி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.50 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலருமான அந்தோணிராஜ் தலை மையிலான பறக்கும் படையினர் திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் கே.கே. ரோடு பகுதியை சேர்ந்த பாலுசாமி மகன் மனோஜ் (வயது 24) என்பவர், உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.56 ஆயிரத்து 550-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வியிடம் ஒப்படைத்தனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் நாராயணசாமி உடனிருந்தார்.