புதுக்கோட்டை, மார்ச் 4- குடிநீர் வராததைக் கண்டித்து, புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைமையில், செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை போஸ் நகரிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில், கடந்த சில நாட்களாகவே குடிநீரும், ஆழ்துளைக் கிணற்று நீரும் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை பிருந்தாவனம் முக்கத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், மாதர் சங்கத்தின் மாநகரச் செயலர் முத்துமாரி, தலைவர் நிரஞ்சனா, கிளைச் செயலர் ஜோதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலர் எஸ்.பாண்டியன், மாநகரக்குழு உறுப்பினர் ஆர்.சோலையப்பன், கிளைச் செயலர் சிவராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்நாயகி உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் மாநகராட்சி அலுவலர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, பிரச்சனைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.