கரூர் அருகே மாணவர்களுக்கு பாடங்களை ஆபாசமாக நடத்திய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பன்னீர்செல்வம் (48). இவர் வகுப்பில் அறிவியல் பாடங்கள் எடுக்கும்போது ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், பெண்களுக்கான மாதவிடாய் போன்ற பாடங்களை பிற பாடங்களை தவிர்த்து முன்னதாக நடத்தியதாகவும், வகுப்பெடுக்கும்போது பாலியல் ரீதியான வண்ணங்களை பயன்படுத்தி குறிப்பிட்டு பேசியதாகவும், ஆபாச வார்த்தைகள் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் பள்ளியிலும், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதனடிப்படையில் உதவி ஆசிரியர் பன்னீர்செல்வத்தை மாவட்டக் கல்வி அலுவலர் விஜேயந்திரன் பணியிடை நீக்கம் செய்து நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.