அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மீது புஞ்சை புகலூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கருப்பையா புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக கருப்பையா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டுமுதல் 2020 வரை புஞ்சை புகலூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் புகலூர் நகர அதிமுக செயலாளர் விவேகானந்தன் என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சுப்பு கார்டன் என்ற பெயரில் உள்ள மனைகளுக்கு தடையின்மை சான்று வழங்கக்கோரி விண்ணப்பித்து இருந்தார். உரிய முறையில் அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு தடையின்மை சான்று வழங்க கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கு பணியாற்றிய கருப்பையா நங்கவரம் பேரூராட்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று, அதிமுக நகரச் செயலாளர் விவேகானந்தன், அவரது மனைவி உள்ளிட்ட ஐந்து நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளனர் என பேரூராட்சிகள் திண்டுக்கல் மண்டலத்திற்கு கருப்பையா புகார் தெரிவித்துள்ளார்.
அதனைதொடர்ந்து ஆட்சி மாற்றம் காரணமாக கிடப்பில் போடப்பட்ட இந்த மனு தொடர்பாக, போலீசார் கருப்பையாவிடம் விசாரணை செய்ததில், போலியாக கையொப்பமிட்டு தடையில்லா சான்று பெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விவேகானந்தன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக இன்று காலை அதிமுக நகர செயலாளர் விவேகானந்தனிடம் விசாரணை மேற்கொண்டபோது அதிமுகவினர், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததும் கருப்பையா வீட்டிற்குச் சென்று போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை சரி செய்து தர வேண்டும். இல்லையென்றால் உன்னை உயிரோடு விடமாட்டோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கருப்பையா மிரட்டல் புகார் அளித்திருக்கிறார்.