உளுந்தூர்பேட்டை, பிப். 24- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்திலுள்ள கல்பாதூர் கிராம தலித் மக்கள் தங்கள் பகுதியில் இறந்தவரின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதனால் மாற்று சமூகத்தவர் விளை நிலங்களின் வழியாக சடலங்களை எடுத்துச் செல்லவேண்டிய நிலை உள்ளது. கல்பாதூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு மயானம் இருந்தும் இறந்த சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலித் மக்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மயான பாதை வேண்டி வழக்கு தொடரப்பட்டதாகவும், வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தலித் மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைத்துத் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்தாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். நீதிமன்ற உத்தரவின் மீதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஒவ்வொரு முறையும் இறந்தவரின் சடலத்தை மற்றவர்களின் நிலங்களின் வழியே எடுத்துச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதிலட்சுமி என்ற பெண் இறந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மாற்று சமூகத்தைச் சேர்ந்த விளை நிலங்களின் வழியே கொண்டு செல்ல வேண்டிய சூழலில் சச்சரவு உருவாகும் நிலை ஏற்பட்டது. எனவே மாநில அரசு தங்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்ற உத்தரவின்படி மயான பாதை அமைத்துக் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.