சிதம்பரம், ஜூலை 2- சிதம்பரம் நகரம் 33-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் ஓரம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வீடுகள் நீர் வழி ஆக்கிரமிப்பில் உள்ளதாக நீதிமன்ற உத்திரவின்படி பொதுப்பணி துறையினர், காவல் துறையினர், வருவாய்த்துறையினர் சனிக்கிழமையன்று வீடுகளை இடிக்க முற்பட்டனர். இந்த நடைவடிக்கையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சிதம்பர நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஹரிதாஸ், சிதம்பரம் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் அப்பகுதியில் வசிக்கும் 45 ஏழை குடும்பத்திற்கு உடனடியாகக்கூடுவெளி சாவடி என்ற இடத்தில் தலா 2 சென்ட் பட்டா வழங்குவதாக உறுதி அளித்தனர்.பின்னர் இதுகுறித்த பெயர் பட்டியலைப் பெற்றுகொண்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதனை ஏற்று இடத்தைக் காண்பித்தபிறகு வீடுகளைத் தாங்களாகவே அகற்றிக் கொள்கிறோம் எனக் கூறினார்கள். வரும் திங்களன்று மாற்று இடத்தைக் காட்டுவதாக வருவாய் துறை சார்பில் கூறப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா, நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், அமுதா, மல்லிகா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.