districts

img

அரசு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் வாகன பிரச்சாரம்!

அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஈரோட்டில் இன்று இரு சக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும். கல்வி நிலையங்களை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இருசக்கர பிரச்சார பயணம் ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் திங்களன்று தொடங்கியது.

  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமையில் தொடங்கிய பிரச்சாரத்தை மூத்த தலைவர் கே.துரைராஜ் தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.சசி வாழ்த்தி பேசினார். தாமரைப்பாளையம், சிவகிரி, எல்லக்கடை, எழுமாத்தூர், அவல்பூந்துறை, வெள்ளோடு, சென்னிமலை, குமரன் சிலை, ஈங்கூர், பெருந்துறை வழியாக காஞ்சிகோவில் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.

இப்பிரச்சாரத்தில் மாவட்டப் பொருளாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன் வாழ்த்தி பேசினார். பிரச்சார பயணத்தின் போது சிவகிரியில் தீரன் சின்னமலை மற்றும் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

செவ்வாயன்று எல்லீஸ்பேட்டையில் தொடங்கும் இரண்டாவது நாள் பயணம் கவுந்தப்படி, பவானி, சித்தோடு, நசியனூர், சோலார், சூரம்பட்டி வழியாக வீரப்பன்சத்திரத்தில் நிறைவடைகிறது.