பவானி அருகே மயானம் இல்லாமல் சடலத்துடன் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்திற்குட்பட்டது ஒரிச்சேரிபுதூர், காமராஜ் நகர். இங்கு அருந்ததிய மக்கள் நூறாண்டு காலமாக வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு தமிழக அரசு சார்பில் முறையாக மயானம் ஒதுக்கீடு செய்து தரவில்லை.
இந்நிலையில், சனியன்று கருப்பாயி என்பவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரின் உடலை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய மயானம் இல்லாமல் சாலையில் வைத்து மறியல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவாரத்தையில் திங்களன்று (நாளை) நிலத்தை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தனர். இதனையேற்ற அப்பகுதியினர் போராட்டத்தை கைவிட்டு பிரேதத்தை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.
இப்போராட்டத்தில், ஒரிச்சேரி ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆர்.கோபால், அகில இந்திய விவசாய தொழிலாளர்சங்கம் மாவட்டப் பொருளாளர் எஸ் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரிச்சேரிபுதூர் கிளை உறுப்பினர்கள் சித்தன், குருசாமி, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.