districts

img

முடங்கியது மல்லிப்பட்டினம்

தஞ்சாவூர், மே12-தஞ்சை மாவட்டத்தில், கஜா புயல் தாக்கி 170 நாட்களை நெருங்கும் நிலையில், இதுவரை மீனவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.கடந்தாண்டு நவம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவு கரை கடந்த கஜா புயல் சேதுபாவாசத்திரம் மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதிகளில்  கோரத்தாண்டவம் ஆடிச்சென்றது. இதில் விவசாயிகள், மீனவர்கள், கூலித்தொழிலாளிகள் என அனைவருடைய வாழ்க்கையையும் கேள்விக்குறியானது.தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை ஆகிய நான்கு மாவட்டங்களில் சுமார் 1595 விசைப்படகுகளில் 188 படகுகள் முழு சேதமும் 1407 படகுகள் பகுதி சேதமும் அடைந்தது.முழு சேதம் அடைந்த 188 படகுகளும் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளை சேர்ந்தவையாகும். அரசு முழு சேதமடைந்த படகிற்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த படகிற்கு 3 லட்சம் ரூபாயும் அறிவித்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பகுதி சேதமடைந்த படகுகளுக்கு 3 லட்சம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் அரசு செலுத்தி விட்டது. முழு சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என விசைப்படகு உரிமையாளர்கள் போராடி வந்தனர். இதனால் நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. நிவாரணம் உயர்த்தி வழங்குவதற்காகத் தான் காலதாமதம் செய்யப்படுகிறது என மீனவர்கள் எண்ணியிருந்த நிலையில் திடீரென இரண்டு மாதங்களுக்கு முன் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த 54 விசைப்படகுகளுக்கு மட்டும் ரூ. 5 லட்சம் வீதம் வங்கிக் கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்பட்டு விட்டது. ஆனால் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதிகளில் உள்ள 134 படகுகளுக்கு இன்று வரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

தற்போது மீன் பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. பொதுவாக தடைக்காலத்தில் துறைமுக பகுதியில் படகுகளை கரையில் ஏற்றி மராமத்து பணிகள் நடைபெறுவதால் பரபரப்பாக காணப்படும். ஆனால் தற்போது நிவாரணம் வழங்கப்படாததால் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ஆட்கள் நடமாட்டமின்றியும் படகுகள் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகிறது. தடைக்காலம் முடிந்தும் கூட மீனவர்கள் கடலுக்கு செல்ல படகுகளை தயார் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் ஏ.கே. தாஜூதீன் கூறியது: 2004 ஆம் ஆண்டு அரசாணையின்படி 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடியிழை படகு வாங்குவதற்கு கூட ரூ. 7.50 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை 5 லட்சம் ரூபாயில் பழைய படகுகூட வாங்க முடியாது. மீனவர்களுக்கு வருமானத்திற்கு வேறு எந்த வழியும் இல்லாததால் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என போராடி வந்தோம். அரசு பரிசீலிப்பதாக கூறி விட்டு திடீரென சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 54 படகுகளுக்கு மட்டும் இரண்டு மாதங்களுக்கு முன் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது.ஆனால் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் சேதமடைந்த 134 படகுகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை. தடைக்காலம் முடிந்தும் கடலுக்கு செல்வோமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒக்கி புயலின் போது கேரள அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை எண்ணி சேதமடைந்த படகுகளுக்கு பதிலாக புதிய படகுகளை வழங்கியுள்ளது. அதே போல் மத்திய, மாநில அரசுகள் புதிய படகுகள் வழங்காவிட்டாலும் பழைய படகுகள் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நிவாரணத்தை உயர்த்தி 10 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும்.தொழிலும் இன்றி, எவ்வித நிவாரண உதவியும் இன்றி முடங்கிய மீனவர் வாழ்க்கை தலைநிமிர தடைக்காலத்திற்கு முன்பாக நிவாரணத்தை உயர்த்தி வழங்கி மீனவர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்ய வேண்டும். படகுகள் இல்லாத துறைமுகத்தை பார்க்கவே மனமில்லாமல் மீனவர்கள் கலங்கிப் போய் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.   (ந.நி.)


படகுகளும், ஆட்களும் இன்றி வெறிச்சோடி காணப்படும் மல்லிப்பட்டினம் துறைமுகம்....