இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்படுவதாக குற்றம் சாட்டி ஆளுநர் ரவியின் படத்தை கிழித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசியல் இயக்கங்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைமையிலான அரசு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. கடந்த ஐந்து மாதங்களாக இம் மசோதா குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி விட்டு தற்போது தமிழக அரசுக்கு நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக ஆளுநரின் இச்செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் நடவடிக்கையை கண்டித்தும்,ஒன்றிய அரசு உடனடியாக தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் தலைமையில் ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதனைத்தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கு ஆளுநர் ரவி மிகப்பெரிய துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டி தமிழக ஆளுநர் ரவியின் உருவப்படத்தை கிழித்தெறிந்தனர். இதனால் சிறிது நேரம் ஆட்சியர. அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வி.மாரியப்பன், மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,
தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சீர்குலைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென கடந்த ஜந்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஒட்டுமொத்த தமிழகமே நீட்தேர்வை எதிர்க்கிறது. இதனையேற்று தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
கடந்த 5 மாத காலமாக தமிழக ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி விட்டு தற்போது திருப்பி அனுப்பியுள்ளார். இத்தகைய திருப்பி அனுப்புகிற அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அவர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான ஆளுநரின் செயலை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி, மக்களாட்சி மாண்புகளுக்கு எதிராக செயல்படுகிறார்.
நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பயன்படுகிறது என்கிறார். எந்த ஆய்வின் அடிப்படையில் இந்த கருத்தை ஆளுநர் தெரிவிக்கிறார். 80 ஆயிரம் பேர்களிடம் கருத்தை்கேட்டு ஆய்வு செய்து நீதியரசர் ஏ.கே. ராஜன் கமிட்டி நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என்கிற அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் ஏஜென்டாக செயல்படும் தமிழக ஆளுநர் பொத்தம் பொதுவாக ஒரு கருத்தை சொல்லி நீட் தேர்விற்கு நியாயம் கற்பிக்கிறார். தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடும்
தமிழக ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுவரை எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.