districts

மணல் மாட்டு வண்டி தொழிலாளர் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.29-திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் தாலுகா மாதவபெருமாள் பஞ்சா யத்தில் செயல்பட்டு வந்த மணல் மாட்டுவண்டி ரீச் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி மூடப்பட்டது. இதனால் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர்.எனவே திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் மணல் மாட்டுவண்டி ரீச் திறக்கக்கோரி கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் மார்ச் 4ம் தேதி லால்குடி தாலுகா அரியூர், திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லைக்குடி ஆகிய இடங்களில் மணல் மாட்டு வண்டி ரீச் திறப்பது. 20 நாட்களுக்குள் கொண்டை யம்பேட்டை, முருங்கப்பேட்டை, பெட்டவாய்த்தலை ஆகிய இடங்களில் மணல் ரீச் திறப்பது என முடிவானது. ஆனால் இதுநாள்வரை மணல் ரீச் திறக்கப்படவில்லை. இதனால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி யும், 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கப்படவில்லை.இந்நிலையில் ஞாயிறு அன்று சர்க்கார்பாளையம், கம்பரசம்பேட்டை, முருங்கபேட்டை, கூடலூர், ஜீயபுரம், முல்லைக்குடி, வேங்கூர், நொச்சியம், லால்குடி உள்பட 20 கிராமங்களில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.இதனை தொடர்ந்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்து டன் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் கஞ்சி தொட்டியுடன் வந்தனர். பின்னர் ஆட்சியர் சிவராசு தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் உடனடியாக மணல் மாட்டு வண்டி ரீச் திறக்க முடியாது. ஆனால் ரீச் திறப்பதற்கான முகாந்திர வேலைகளை உடனே துவங்கி மே 30ம் தேதி திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லைக்குடி பகுதியில் ரீச் திறப்பது என முடிவானது.இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மணல் மாட்டு வண்டி சங்க மாவட்டச் செயலாளர் ராமர், மாவட்ட தலைவர் சேகர், சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ரெங்கராஜன், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.