வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்ற தொடர்ந்து முயற்சித்து வந்த அமெரிக்கா ஜன. 3 அன்று அதிகாலை வெனிசுலா தலைநகர், கராகஸ் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதலையடுத்து, வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது இணையரையும் கைது செய்த அமெரிக்க ராணுவம் இருவரையும் சிறையில் அடைத்தது.
வெனிசுலா மீதான அராஜகமான தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா, பிரேசில், ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் அமெரிக்காவை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மதுரோவையும், அவரது இணையரையும் விடுதலை செய்யக்கோரியும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
