சென்னை, மே 5-எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஞாயிறன்று (மே 5) நாடு முழுவதும் நடந்தது.நாடு முழுவதும் 154 நகரங்களில் மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடந்தது. 15.19 லட்சம் மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதினர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட 14 நகரங்களில் நீட் தேர்வு நடந்தது. பானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் மட்டும் தேர்வு நடைபெறவில்லை. பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடுமையான சோதனைகளுக்குப் பின்னர்தான் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் தேர்வு நடந்த எல்லா நகரங்களிலும் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. தலை முதல் கால் வரை மாணவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. தேர்வு மையங்களின் முன்பாக பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்வு மையங்களின் வாசலில் காத்துக்கிடந்தனர்.ஏற்கெனவே அறிவித்தபடி நகைகள், மூக்குத்திகள், மோதிரங்கள் போன்றவை அணிந்து வர அனுமதிக்கப்படவில்லை. ஆதார் கார்டு, புகைப்படங்கள், ஹால் டிக்கெட் கலர் ஜெராக்ஸ் போன்றவை கேட்கப்பட்டதால் கடைசி நேரத்தில் பல இடங்களில் மாணவர்கள் அவதிக்குள்ளானார்கள். தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா வழங்கப்பட்டுள்ளது. தேர்வு நேரமான 3 மணி நேரம் முடியும் வரையில் மாணவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் பலர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இம்முறை வினாத்தாள் எளிமையாக இருந்ததாகக் கூறியுள்ளனர். கடந்தமுறைப் போன்று தமிழ் வினாத்தாளில் குளறுபடிகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் இயற்பியல் பிரிவு கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாகவும், வேதியியல், உயிரியல் பிரிவு கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு கர்நாடகாவிலிருந்து பெங்களூரு செல்லும் ரயில் 6 மணி நேரத்துக்கு மேல் தாமதமானதால் அந்த ரயிலில் பயணித்த 250க்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுத இயலவில்லை. இதுதொடர்பாக தங்களுக்கு உதவ வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அந்த ரயிலில் பயணித்த மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், இந்நாள் முதல்வர் குமாரசாமியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஆண்டைப் போலவே மாநிலப் பாடத்திட்டத்தில் குறைவான கேள்விகளும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது.