புதுதில்லி:
நாடு முழுவதும் உயர்கல்விக்கான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படலாம் என்று ஒன்றிய அரசுஅதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உயர்படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ தேர்வும், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஒன்றிய அரசு, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து ஒன்றிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,ஜேஇஇ மற்றும்நீட் தேர்வு நடத்த முடியுமா என்பதை தீர்மானிக்க நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் நீட்தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்துபரிசீலிக்கப்படுகிறது. அதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.