districts

பொள்ளாச்சியில்

கோவை,மே 5-கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் திட்டமிட்டு கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நரிகள்பதி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பாலன். அவரது மனைவி தேவி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.இதையடுத்து பிரசவ வார்டுக்கு மாற்றப்பட்ட தேவியிடம், பெண் ஒருவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினருக்கு துணையாக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு நெருங்கி பழகியுள்ளார். மேலும் குழந்தையையும் கவனித்து கொள்வது போல 4 நாட்களாக பிரசவ வார்டிலேயே இருந்துள்ளார்.இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்காக, தேவியை அவரது கணவர் பாலன் அழைத்து சென்ற போது தானும் மருத்துவமனை வாயில் வரை வருவதாக கூறிய அந்த பெண், குழந்தையை தூக்கி வந்துள்ளார். மூவருமாக சேர்ந்து வெளியே வந்த நிலையில், பாலன் மருந்து வாங்குவதற்காக சென்ற போது, அந்த பெண் குழந்தையுடன் தப்பியோடியுள்ளார்.இதையடுத்து குழந்தையை காணாமல் பதறிப்போன தம்பதியினர் காவல்துறையினருக்கு தகவலளித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு கிழக்கு காவல்நிலைய காவலர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த பெண், குழந்தையை கடத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.