கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 2000 ஊழியர்களை திடீரென எந்தவித முன்னறிவிப்பு இன்றி வேலையை விட்டு நிறுவனம் நீக்கியதால் பாதிக்கப்பட்டோரில் 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை ஆர்எஸ்புரம், சுங்கம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் focus edumatics என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அமெரிக்காவைச் சார்ந்த இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வேலையை விட்டு நீக்கி உள்ளனர்.
இந்நிலையில், திடீரென முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூன்று மாத கால சம்பள தொகையை பெற்றுத் தர வேண்டும், 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து வருபவர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட செட்டில்மெண்ட் தொகையினை பெற்றுத் தர வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் கே.மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் கே.ரத்தினகுமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட சிஐடியு, வாலிபர் சங்கம் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட ஊழியர்களை சந்தித்து பேசினர். பின்னர் மாவட்ட தொழிலாளர்கள் நலத்துறை அலுவலரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் பேசும்போது அவர்கள் கூறுகையில், கோவையில் மட்டும் இந்நிறுவனத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களில் இருந்து உயர்பதவியில் இருப்பவர்கள் வரை இரண்டாயிரம் பேர் வரை விடுவிக்கப்பட்டு நிறுவனம் மூடப்பட்டதாக தொழிலாளர்களுக்கு இமெயிலில் மட்டும் தகவல் தந்துள்ளனர்.
நடப்பு மாதத்தில் சம்பளம் மற்றும் வேலை நீக்கத்திற்கான காரணத்தை தெரிவித்து அதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.