districts

சுதேசி கொள்கைகள் குறித்து ஆகஸ்ட் 15 வரை மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்

இப்பொழுது மே மாதம் நடைபெறுகிறது. வருகிற ஆகஸ்டு 15க்குள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்வோம். அயல்நாட்டு சந்தைப் பொருட்களை படிப்படியாக உள்நாட்டில் விற்பனை செய்வதை நிறுத்திடுவோம். ஆகஸ்ட் 15க்கு பின்னர் விற்பனை செய்பவர்கள் சங்கத்தின் மூலம் நீக்கம் செய்ய நடவடிக்கை தொடரப்படும்.உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் மத்திய அரசு சிறு, குறு தொழில்களை அழித்து வருகிறது. இந்த தூத்துக்குடி மண் பாரதி, கட்டபொம்மன், வ.உ.சி போன்ற தலைவர்கள் அந்நிய சக்திகளைவிரட்டிட களம் கண்ட பூமி. ஆகவே இந்தசுதேசி பிரகடனத்தை இங்கு அறிவிப்பதே பொருத்தமாகும்.வெளிநாட்டு தயாரிப்புகளை நாம் உபயோகப்படுத்தினால் மீண்டும் நம்நாடு வெளிநாட்டு சக்திகளிடம் அடிமைப்பட்டு விடும். நாட்டை ஆளும் தலைவர்களிடம் பலமுறை கூறியும் பயனில்லை. கப்பலில் வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இது உடலுக்கு கெடுதல் தருகிறது. கோகோ கோலா, பெப்சி, குர்குரே போன்ற பொருட்கள் மற்றும் மரபணு மாற்று விதைகள் இவைகளால் மலட்டுத்தன்மை ஏற்படும். ஹார்லிக்ஸ், பூஸ்ட் இவற்றிற்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்பான மன்னா சத்துமாவு போன்றவற்றைஉபயோகிக்க வேண்டும். அந்நிய வெளிநாட்டு சக்திகளை வளர்ப்பதில்தான் நம் நாட்டு தலைவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இதுபோன்ற ஆபத்தை முறியடிக்கவே இந்த சுதேசி உற்பத்தி வணிகப் பிரகடன மாநாடு ‘‘உள்நாட்டில் உற்பத்தி; உள்நாட்டில் விற்பனை’’ என்பதே நமது கொள்கை.

வங்கிகளை தனியாரிடம் கொடுத்துவிட்டு ஏழை மக்களை தவிக்கவிட்டு, வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் அழிவது நம்மைப்போல் சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகள்தான்.ஆன்லைன் விற்பனை தொடங்கிய காலம் முதல் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இதனால் பொருட்கள் வீடு தேடி வருகின்றன. ஆகவே சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மக்களின் உரிமை என்பது சில்லரை வணிகம், விவசாயம், சிறு, குறு தயாரிப்புகள், சமையல் எண்ணெய் உற்பத்தி என்பது எல்லாம் தான். நம் உரிமை இதை நாம் காப்பாற்ற வேண்டும். வணிகசுதந்திரம் வேண்டுமானால் அந்நியப் பொருட்களை விரட்டியடித்து நமது உள்ளூர்பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.அப்படி வரும் பட்சத்தில் மத்திய அரசோ, பிரதமர் மோடியோ குடும்ப அட்டையில் மாதாமாதம் ஹார்லிக்ஸ், பூஸ்ட் வாங்க வேண்டுமென்று உத்தரவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை நுழைத்தவர்கள்.தற்போதைய மக்கள் நலன் காக்கப்படவேண்டிய போராட்டங்கள் உயிரை பணயம் வைத்துத்தான் போராட வேண்டிஉள்ளது என்பதை தூத்துக்குடி நமக்குஉணர்த்தியுள்ளது. இனிவரும் காலங்களில் உயிரை கொடுத்துத்தான் போராட வேண்டும். வீட்டின் குடும்பத் தலைவராக நாம் உள்ளபோது எவனோ ஒருவன் வந்து நீ இப்படித்தான் வாழ வேண்டும் என்று தீர்மானிப்பது போல் உள்ளது மத்திய அரசின் செயல்பாடுகள்.

வன்முறை கலாச்சாரம், அரசியல்வாதிகளின் அராஜக வசூல், அதிகாரிகளின் கட்டாய வசூல் இவைகளையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. அதுபோல இதையும் தடுத்து நிறுத்த முடியும்.பாரதி கூறியதுபோல் அக்கினியிட்டு கொளுத்திடுவோம். அந்நிய ஆதிக்கத்தை இனி வளரவிடக்கூடாது. தமிழகம்முழுவதும் 6,000 வணிகர் சங்கங்கள் உள்ளன. இதை இன்றிலிருந்து தொடங்கிட வேண்டும்.நமது கடைகளில் இங்கு வெளிநாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்பனை இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கவேண்டும். ஆகஸ்ட் 15க்குள் பாரதி கூறியது போல் சிறுகச் சிறுக ஆங்காங்கே அக்கினி குஞ்சுகளாக நெருப்பு வைத்துஅந்நிய மோகத்திற்கு அடிமையானவர்களும் தப்பு செய்துவிட்டோமே என்று நம்மை நோக்கி ஓடோடி வர வேண்டும்.‘‘இயலாது என்று முயலாது’’ இருப்போமானால் எதுவும் செய்ய முடியாது. சாதி, மதங்களை கடந்து வணிகர்கள் என்ற முறையில் இந்த சுதேசி பிரகடனத்தை நாம் சாதிப்போம்.


தூத்துக்குடியில் 36 ஆவது வணிகர் சங்க மாநில மாநாடாகவும் சுதேசி பிரகடன மாநாடாகவும் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகர் சங்க பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் ஆற்றிய உரையிலிருந்து...