கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பநாயக்கன்பட்டி - கலங்கல் சாலையில் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த நான்கு சக்கர வாகனத்தைச் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் மகன் சுரேஷ் பாபு(34) மற்றும் ராஜா கண்ணு மகன் பாரதி (29) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் அப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள குடோனில் சுமார் 1200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது அங்குப் பதுக்கி வைத்திருந்த சுமார் 1200 கிலோ புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து , வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி மகன் தென்னரசு (29) என்பவரைக் கைது செய்தனர். இந்நிலையில் மேற்படி சுரேஷ் பாபு (34), பாரதி (29) மற்றும் தென்னரசு (29) ஆகியோரிடமிருந்து ரூபாய் 12,71,904/- மதிப்புள்ள 1400 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்து, 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்