சென்னை, பிப். 9- உஸ்மான் சாலை, சாலையோர வியா பாரிகளுக்கு தற்காலிக மாற்று இடம் வழங்க வேண்டும் என்று சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வியாழனன்று(பிப்.9) கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் அளித்துள்ள மனுவின் சுருக்கம் வருமாறு: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலையை இணைத்து புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகடை வியா பாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த வியாபாரிகள் 10க்கும் மேற்பட்ட சங்கமாக செயல்பட்டு வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இடஒதுக்கீடு பெற்று, மாநகராட்சிக்கு மாத வாடகை செலுத்தி வருகின்றனர். ஆகவே, இந்த வியாபாரிகளுக்கு தற்காலிகமாக வியாபாரம் செய்ய மாற்று இடம் வழங்க வேண்டும். பாலப்பணிகள் முடிந்தபின்பு, பாலத்தின் கீழ்ப்பகுதியில் மீண்டும் கடைகளை ஒதுக்க வேண்டும்.
மூர்மார்க்கெட்
மூர்மார்க்கெட் வணிக வளாகத்தை சுற்றி 680க்கும் அதிகமான வியாபாரிகள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பிற்காக தெருவிளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சாலையோர வியா பாரிகளுக்கான தேசிய கொள்கை – 2016ஐ அமல்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர், உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் தெரி வித்தார். இந்நிகழ்வின்போது, கூட்டமைப்பின் துணைத்தலைவர் முஸ்தபா, முகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.