சென்னை, நவ. 28- அரசு மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், இதுவரை அரசு மருத்து வர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். அடுத்ததாக வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து விட்டு, அங்கு மவுனப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளோம். இதனால் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என கருதி, தற்போது மருத்துவர்களை பழி வாங்கும் வகையில் அரசு செயல்படுகிறது. போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, செயலாளர் டாக்டர் தாஹிர், மகளிர் அணி செயலாளர் டாக்டர் லதா பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 17பி குற்ற குறிப்பாணையை அரசு வழங்கி யுள்ளது. அதாவது கலந்தாய்வில் நடந்த பல்வேறு முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீதுதானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்? அதைவிடுத்து பாதிக்க ப்பட்ட மருத்துவர்களுக்கு நியாயம் கேட்ட பிரதிநிதிகளையே தண்டிப்பார்களா? இப்போது பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளை சுட்டி காட்டி யதற்கே தண்டனை என்பதை, சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு 3 மருத்துவர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மேலும் கலைஞரின் அரசாணை 354 உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.