சென்னை, ஜூலை 31 - சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டுமென்று சென்னை செங்கல்பட்டு லோடிங் அண்டு அன்லோடிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனின் 30வது ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஜூலை 31) கிண்டியில் நடைபெற்றது. இதில், நலவாரிய செயல்பாடுகள் அனைத்தையும் மாவட்டத் தலைநகரங்களில் அமைய வேண்டும். தொழி லாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். விபத்து நிதியை 5 லட்சம் ரூபாயாகவும், இயற்கை மரண நிதியை 2 லட்சம் ரூபாயாகவும் வழங்க வேண்டும். கோயம்பேடு வணிக வளாகத்தில் 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையமும், மலிவு விலை உணவகமும் அமைக்க வேண்டும், கிண்டி எஸ்டேட்டில் சுமைப்பணி வேலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடபதி, பொருளாளர் அருள்குமார், சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ம.நீலமேகம், பொருளாளர் எச்.சம்சுதீன், துணைத் தலைவர் எம்.ராமு உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் தலைவராக பா.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளராக ம.நீலமேகம், பொருளாளராக எச்.சம்சுதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.