ஆம்பூர், செப். 15- ஆம்பூர் வீரன் குப்பம் பகுதியை சேர்ந்த தண்டபாணி-அனுராதா. தம்பதிகளின் மகள்கள் ஜெயஸ்ரீ (17), வர்ஷா ஸ்ரீ (12). புது கோவிந்தாபுரத்தி லுள்ள தனியார் பள்ளியில் ஜெயஸ்ரீ 12ஆம் வகுப்பும், வர்ஷா ஸ்ரீ 7ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் பள்ளி பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். வியாழக்கிழமை (செப்.15) காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டனர். சிறிது காலதாமதம் ஏற்பட்டதால் பள்ளி பேருந்து சென்று விட்டது. இதையடுத்து, மகள்கள் இருவரை யும் தந்தை தண்டபாணி தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத் துச் சென்று கொண்டிருந்தார். ஆம்பூர் ஏஆர் திரையரங்கம் அருகே சென்று கொண்டிருக்கும்போது ஓசூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஜெயஸ்ரீ, வர்ஷா ஸ்ரீ இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். தண்டபாணி படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர், படுகாயமடைந்த தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித் தனர். விபத்தில் பலியான மாணவிகள் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு மகள்களும் பள்ளிக்கு செல்லும்போது விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்க ளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.