புதுச்சேரி, ஜன.20- கட்டி முடித்துள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை உடனே திறக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் புதுச்சேரி மாநிலக் குழு கூட்டம், முன்னணி தலைவர் கொளஞ்சியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வழக்கறிஞரும், செயலாளருமான சரவணன், சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் சஞ்சய், துணைத் தலைவர் ரஞ்சித், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா, மற்றும் நிர்வாகிகள் உமா சாந்தி, குப்புசாமி, கார்க்கி விஜய், சின்னதுரை ஆகியோர் பங்கேற்றனர். தீர்மானங்கள் புதுச்சேரியில் தொகுதி வாரியாக கட்டிமுடித்து திறக்கப்படாமல் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களை அரசு உடனே திறக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பிப்ரவரி 18 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதேப்போல் ஏப்ரல் 14 ஆம் தேதி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற தலைப்பில் மாநில அளவில் கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.