districts

img

கட்டுமான பணிகளுக்கு சவுடுமண் எடுக்க அனுமதி வழங்குக மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

திருவள்ளூர், ஜன.12- வாழவந்தான் கோட்டையில் இருளர் இன மக்கள், தங்களின் தொகுப்பு வீடுகளுக்காக, கட்டுமான பணிகளுக்கு சவுடுமண் எடுக்க பூண்டி பிடிஒ அனுமதி பெற்றுத் தர வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கச்சூர் ஊராட்சி வாழவந்தான் கோட்டையில் 75க்கும் மேற்பட்ட இருளர் இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 16 குடும்பங்களுக்கு 2023-24 ஆம் ஆண்டு வீடு கட்ட  பிஎம்ஜென்மன் திட்டத்தில் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கியுள்ளது.  ஒரு தொகுப்பு வீட்டிற்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணி ஆணைபெற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இப்போது தங்களின் தொகுப்பு வீடுகளில் சவுடு மண் நிரப்ப வேண்டும். வீடுகளில் மண் நிரப்புவதற்கு ஊத்துக்கோட்டை வட்டாட்சியரிடம் அனுமதி கடிதம் பெற்று கொடுத்தால் தான், மண் நிரப்ப முடியும். இந்த அனுமதி கடிதத்தை பூண்டி பிடிஒ பெற்றுத்தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவிக்கையில்,  அரசு இருளர் இன மக்களுக்கு ஒதுக்கிய நிதியை    உடனடியாக அம்மக்களுக்கு கொண்டு செல்ல அரசு அதிகாரிகள் முயல்வதில்லை. மாறாக  எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்தினால் தான் வேலை நடக்கும் நிலை உள்ளது. வீட்டுமனை, பட்டாக்கள்,தொகுப்பு வீட்டிற்குகான பணி ஆணைகள் பெற போராடித்தான் பெறுவதாகவும் அரசின் உத்தரவுகள் இருந்தும் அதிகாரிகள் இருளர் இன மக்களுக்கு பணியாற்ற மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வாழவந்தான் கோட்டையில் வாழும் இருளர் இன மக்கள் தொகுப்பு வீடுகளுக்கு கட்டுமான பணிக்கு  சவுடு மண் தேவைப்படுகிறது. இந்த மண் எடுப்பதற்கு பூண்டி பிடிஒ காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனுமதி பெற்றுக்கொண்டுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.