districts

சென்னை முக்கிய செய்திகள்

பொங்கல்: சென்னை புறநகர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

சென்னை, ஜன.12- பொங்கல் பண்டிகை ஜன.14 அன்று கொண்டாடப்படவுள்ளது. பொது விடுமுறை நாள் என்பதால் சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் பிரதான நேரங்களில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டாலும் மொத்த சென்னையே ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பயணிகளுக்கு முக்கியப் போக்குவரத்து வசதியாக உள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்க ளில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வரு கிறது. வார நாள்களைவிட ஞாயிற்றுக்கிழ மைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை என்ப தால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 14 ஆம் தேதியான பொங்கல் பண்டிகை தினத்தன்று புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்கப்படும் கால அவகாசத்தின்படி இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆட்சியர்களுக்கு அரசு அனுமதி

சென்னை, ஜன.12- தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கும் நெல் கொள்முதல் பருவத்தை முதலமைச்சரால் விவசாயிகளின் நலன் கருதி செப்டம்பர் மாதம் முதல் துவங்க  கடந்த மூன்று ஆண்டு களாக ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கடந்த கே.எம்.எஸ் 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய பருவங்களில் சுமார் 40 இலட்சம் மெ.டன்னிற்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் நடப்பு கே.எம்.எஸ் 2024-2025-ம் பருவத்தில் 01.09.2024 முதல்  09.01.2025 வரை 75,936 விவசாயிகளிடமிருந்து 5,48,422 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதலுக்கான விலையாக ரூ.1,313.96 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.  மேலும், தமிழ்நாட்டில்  சம்பா, தாளடி  நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், நாளது தேதியில் 1176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரு கிறது. நடப்பு கொள்முதல் பருவத்திற்காக 8281 பருவகாலப் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு 3448 எண்ணிக்கையிலான துாற்றும் இயந்திரங்கள், 3980 எண்ணிக்கையிலான ஈரப்பத சோத னைமானிகள், தேவையான அளவு காலிசாக்குகள் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பது மற்றும் புகார்கள் தொடர்பாக தலைமை அலுவலக உழவர் உதவி மையம் சேவை 1800 599 3540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, தேவையான கூடுதல் இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து எவ்வித புகாருக்கும் இடமின்றி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது எனவும் என்று தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரி வித்திருக்கிறார்.

ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு

செங்கல்பட்டு, ஜன. 12: தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நாள்களை முன்னிட்டு கடந்த ஓராண்டில் பிடிபட்ட ரூ.50 கோடி ரூபாய் மதிப்பிலான 2,322 கிலோ போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. சென்னையில் உள்ள மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதி களில் இருந்து பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப் பட்ட போதை பொருட்களை செங்கல்பட்டு அடுத்த தென்மேல் பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் எரித்து அழிக்கப்பட்டன. இதில் 1,777 கிலோ கஞ்சா, 3 கிலோ  ஹாஷிஷ், 19.2 கிலோ மெத்தாம்பேட்டமைன், 3.8 கிலோ ஹெராயின், 1.3 கிலோ கொகைன், 517 கிலோ எபெட்ரின் உள்ளிட்ட 2,322 கிலோ போதைப்  பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.

நுண்ணறிவு பிரிவு  எஸ்.ஐ.,யின் டேப் மாயம்

சென்னை, ஜன.12-  அமைந்தகரை காவல்நிலைய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் குணசேகரன், அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நுண்ணறிவு பிரிவு தகவல் சேகரிப்புக்காக தங்களுக்கு டேப் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்பில் முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் சேகரித்து வைத்துள்ளோம். பணிமுடித்து தகவல் சேகரித்துவிட்டு காவல் நிலையம் வந்து பார்த்தபோது டேப்பை காணவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

ரயிலில் சிக்கி துண்டான ஆண் கை

தண்டையார்பேட்டை, ஜன.12: கோவையில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் சனிக்கிழமையன்று மாலை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. அந்த ரயிலின் முன்பதிவு இல்லா பெட்டி அடியில் ஆணின் மணிக்கட்டுக்கு கீழ் வலது கை தொங்கிய நிலையில் இருந்தது. தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் இருந்து சென்னை வரும் வழியில், தண்டவாளத்தை கடக்க முயன்றவர் மீது ரயில் மோதி, அவரது கை மட்டும் ரயிலில் சிக்கி வந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை: நிரம்பி வழியும் திநகர், புரசை, எம்.சி சாலை சென்னை, ஜன.12-  பொங்கல் பண்டிகை (ஜன.14) கொண்டாடப்படும் நிலையில் , புத்தாடை வாங்குவதற்காகவும், பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கும் தியாகராய நகர், புரசைவாக்கம், எம்சி சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொடுங்கையூர் குப்பை  கிடங்கில் செம்பு திருட்டு

சென்னை, ஜன.12: கொடுங்கையூர் குப்பை கிடங்கில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 6 மாதமாக பயோ மைனிங் முறையில் குப்பையை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து தனியார் நிறுவன மேலாளர் ராமஜெயம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலில் வளாகத்தில் கைவிடப்பட்ட  பெண் சிசு மீட்பு

செங்கல்பட்டு, ஜன.12- செங்கல்பட்டு பழவேலி திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலை தினமும் இரவு 8 மணிக்கு பூட்டி விட்டு அதிகாலை 5 மணிக்கு திறப்பது வழக்கம். அதன்படி, வழக்கம் போல சனிக்கிழமையன்று அதிகாலை 5 மணிக்கு சிவன் பூசாரி அருண் கோயிலை திறந்து கோயில் பணிகளை துவங்கியபோது ஏதோ குழந்தை அலறல் சத்தம் கேட்டுள்ளது.அதிர்ச்சியடைந்த பூசாரி அருண் உடனே செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் குழந்தையை மீட்டு தாலுகா போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 3 நாட்களே ஆன அந்த பெண் சிசுவை குழந்தைகள் நல குழுமத்திடன் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குழந்தையை கோயிலில் வீசிசென்ற மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் நடைமுறை

புதுச்சேரி, ஜன.12- புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை ஜன.12 முதல் அமலானது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்ததுடன், ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி யுள்ள நிலையில் புதுச்சேரியில் செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இதனிடையே புத்தாண்டு முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறி வித்தது. அதன்படி போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். வினாடி-வினா போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கினர். இதனிடையே புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேலும் சில நாட்கள் விழிப்பு ணர்வு ஏற்படுத்திவிட்டு ஞாயிறு (ஜன.12) முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று அரசு நிர்வாகம், உயர் கல்வித்துறை சார்பில் உத்தர விடப்பட்டது. போக்குவரத்து போலீ சார் ஹெல்மெட் அணிவது பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளை தொடர்ந்து நடத்தி நடத்தினர். சாலை விபத்துகளில் ‘’உயிரி ழப்பு இல்லாத புதுச்சேரி என்ற மையக்கருத்தோடு ஹெல்மெட் அணிவது குறித்து பிரமாண்ட விழிப்பு ணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது அமலுக்கு வந்தது. இதையொட்டி புதுச்சேரி போக்குவரத்து போலீசார் காலை முதல் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, சிவாஜி சிலை அருகே போக்குவரத்து சீனியர் எஸ்.பி. பிரவீன் குமார் திரிபாதி உத்தரவின்  பேரில் கிழக்கு - வடக்கு எஸ்.பி. செல்வம் தலைமையில் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாரும், மரப்பாலம் சந்திப்பில் கிழக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமை யில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து அபாராதம் விதித்தனர். ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.  இதே போல் பாகூர், தவளக்குப்பம், வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து அறிவுறுத்தி அனுப்பினர். அதே நேரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சீனியர் எஸ்பி பிரவீன்குமார் திரிபாதி ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

எல்லையோரம் குவிந்துள்ள மதுபான கடைகளால் சீரழியும் சட்டம்-ஒழுங்கு புதுச்சேரி அரசு மீது சிபிஎம் கடும் விமர்சனம்

புதுச்சேரி, ஜன.12-  எல்லையோரம் குவிந்துள்ள மதுபான கடைகளால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதால் புதுச்சேரி அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம்-கடலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள  பாகூர் கொம்யூன் பகுதிக்குட்பட்ட சோரியங்குப்பம், குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம்,  கும்ந்தாமேடு, மணமேடு கரையாம்புத்தூர் கிராமங்க ளில் சட்டத்திற்கு புறம்பாக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் 25க்கும் மேற்பட்ட மது கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைகள் அமைக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கிறார்கள். இளைஞர்களை சீரழிக்கும் விதமாகவும் அப்பகுதி பெண்கள் குழந்தைகள் மக்களின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக அரசு உள்ளது.  மேலும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் குப்பை மேடாக பாகூர் பகுதி  வருகிறது. இத்துடன், நாளுக்கு நாள் மதுபான கடைகளின் எண்ணிக்கையை அதி கரித்து வருகிறது. பாகூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களால் ஒரே மாதத்தில் மட்டும் 6 பேர்  மரணமடைந்துள்ளனர். குடித்து விட்டு தகராறுகள், சாலையில் செல்பவர்களிடம் வம்பு இழுப்பது, பெண்கள் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்வது, தங்களுக்குள் அடித்துக் கொண்டு செத்து மடிவதும் அதிகரித்துள்ளது. ஆடு,மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளை மிரட்டுவது, வழிப்பறி, பொருட்களை திருடுவது என தினந்தோறும் சமூக குற்றங்கள் நடந்து வரும் இடமாக பாகூர் மாறி உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் வாரம் ஒரு குற்றச் சம்பவம் மற்றும் கொலை சம்பவம் நடக்கும் அளவுக்கு இடமாக மாறியுள்ளது. எனவே, குற்றங்களுக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக எல்லையோரம் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை நவாத்தோப்பில் மற்றும் சித்தேரி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய காவல் துறை சோதனை சாவடி மற்றும் பாதுகாப்பு காவல் மையம் அமைக்க புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் ப.சரவணன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

மது கடத்தியவரிடம் பணம் வசூல்: 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

விழுப்புரம், ஜன.12- மதுபாட்டில்கள் கடத்திச் சென்ற நபர்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க, பணம் வசூலித்து, விடுவித்த மதுவிலக்கு அமல் பிரிவு தலைமை காவலர்கள் மூன்று பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய அழகப்பன், காமராஜ் மற்றும் செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய தலைமைக் காவலர் மாதவன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன், கண்டமங்கலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த  வேலுார் மாவட்டம், ஆரணியை சேர்ந்த நபரை நிறுத்தியுள்ளனர். அவர், புதுச்சேரியில் 10 மது பாட்டில்களை கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து நடத்திய விசாரணையில், தனது நண்பர்களுக்கு கொடுப்பதற்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிச் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த காவலர்கள், வழக்குப் பதிவு செய்து கைது செய்வதாக மிரட்டியுள்ளனர். அப்போது பேரம் பேசிய காவலர்கள், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க,  ரூ.4,500 பணத்தை வாங்கியதோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீசாரிடம் கெஞ்சியதால் வழக்கு போடாமல் அனுப்பியுள்ளனர். இது குறித்து தகவல், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.