ஆரணி, மே 4- ஆரணியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கே.கே.நகர் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் சொந்த இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் செல்போன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்கும் இடத்திற்கு வந்து செல்போன் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி டவுன் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.