திருக்கோவிலூர், மே 15- விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவலூர் முழு நேர கிளை நூலகத்தில் அறிவுசார் அரங்கம் திறப்பு, புதிய நூல்கள் கண்காட்சி, போட்டித் தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் நூலகப் புரவலர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளுக்கு வாசகர் வட்ட குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். இவ்விழாவில் நகர்மன்றத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா, மாவட்ட மைய நூலகம் நல்நூலகர் ம.இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். நூலகர் வி.தியாகராஜன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள ஆங்கில நூல்களின் புத்தக கண்காட்சியை மாவட்ட நூலக அலுவலர் சி.பாலசரஸ்வதி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பயன்பாட்டிற்காக ரூ. 3.50 லட்சம் செலவில் வாசகர் வட்டம் சார்பில் சமூக ஆர்வலர் கு.ராகவேல், பணி நிறைவுபெற்ற ராணுவ வீரர் கு.கல்யாணகுமார் ஆகியோர் அமைத்துக் கொடுத்த அறிவுசார் அரங்கத்தை பணி நிறைவு பெற்ற நல்லாசி ரியர் சந்திரா திறந்து வைத்தார். பல்வேறு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களை பாராட்டியும், நூலக புரவலர்களுக்கு பட்டயம் வழங்கியும் வாழ்த்தியும் திருக்கோவலூர் நகர்மன்றத் தலைவர் டி.என்.முருகன் பேசினார். நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.