districts

img

நெடுஞ்சாலைக்காக வீடுகளை இடிக்கும் அதிகாரிகள் பரிதவிக்கும் ஒன்னல்வாடி கிராம மக்கள்

ஓசூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் ராயக்கோட்டை-தருமபுரி சாலையில் ராஜாஜி பிறந்த தொரப்பள்ளி அருகில் உள்ளது. ஒன்னல்வாடி கிராமம். 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு வழிப்பாதையாக இருந்த சாலை, 20 ஆண்டுகளில் நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு தற்போது 4 வழிச்சாலையாக மாற்ற அளவீடு செய்கின்றனர்.  இங்கு வசிக்கும் மக்கள் ஊரின் ஒதுக்குப்புறம் நத்தம் புறம்போக்கில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக மண் குடிசை கட்டினர். வறுமையில் வாழ்ந்து வரும் கிராம மக்கள் குடியிருந்து வரும் பகுதி 10 ஆண்டுகளுக்கு முன்பாக இரு வழி சாலையாக மாற்றப்பட்ட போது சாலைக்காக 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டது.  தற்போது நான்கு வழிச்சாலை யாக மாற்றப்பட அளவீடு துவங்கப் பட்டுள்ள நிலையில், சாலை விரி வாக்கத்திற்காக மேலும் வீடு கள் இடிக்கப்பட உள்ளது. இத னால் ஒரு மாதத்திற்கு முன்பு மின்சார இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ளதால் இங்கு வசித்து வரும் மக்கள் செய்வதறியாமல் பரித வித்துக்கொண்டுள்ளனர்.  அரசு அதிகாரிகளின் நடவடிக்கை யால் பாதிக்கப்பட்ட 85 வயது மூதாட்டி கூறுகையில், “60 ஆண்டு களுக்கு முன்பு எனது கணவர் கட்டிய குடிசையில் நான் மட்டுமே வசித்து வருகிறேன். என் மகள் திருமணமாகி சென்று விட்டாள். பாதுகாப்பதற்கு  யாரும் இல்லை.

இந்த வீட்டை இடித்து விட்டால் நான் எங்கு செல்வது என்று தெரிய வில்லை. அரசாங்கம் எனது குடிசை வீட்டை இடிப்பதற்கு முன்பு வேறு வந்த இடத்திலாவது ஒரு ஓலை குடிசையாவது கட்டிக் கொடுக்க வேண்டும்”என்கிறார். 86 வயதான சென்வீரப்பா,“ 1966 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிறிய மண் குடிசையில்தான் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்தோம். இதைத் தவிர எங்களுக்கு சொந்த நிலமோ, வீட்டுமனையோ கிடையாது. கூலி வேலைக்கு சென்று எங்கள் காலத்தை நகர்த்திவிட்டோம். இந்தநிலையில், குடிசையை இடித்துவிட்டால் தெருவில் தான் நிற்க வேண்டும்” என்றார். இந்தப் பகுதியில் சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்த நவீன், “எங்கள் அப்பா-அம்மா காட்டிய இந்த மண் குடிசையை நம்பித்தான் நாங்கள் வசித்து வருகிறோம். இதைத் தவிர வேறு ஆதாரம் ஏதும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்” என்கிறார். சகாயமேரி, “ 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே எங்கள் வீட்டில் பெரும் பகுதியை இடித்துவிட்டனர். அதன்பிறகு, கால்வாய் கட்டுவதற்காக வீட்டின் முன் பகுதியை இடித்தனர். கூட்டுக் குடும்பமாக 9 பேர் வசித்து வரும் எங்கள் வீட்டை தற்போது முழுமையாக இடிக்க உள்ளனர்.

இதனால் எங்கு செல்வது என்று தெரியவில்லை”என வேதனையுடன் கூறினார். பேக்கரி நடத்தி வரும் சேகர், “ 10 வருடங்களுக்கு முன்பு வெளியூ ரிலிருந்து இங்கு வந்து ஒரு இடத்தை வாங்கி வீடும், சிறிய கடையும் (பேக்கரி) நடத்தி வருகிறேன். எனது வீடும் பாதி இடிப்பதற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்” என்று தனது உள்ள குமுறல்களை வெளிப்படுத்தி னார். சிபிஎம் ஓசூர் ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி, அந்தோணி ஆகியோர் கூறுகையில், “ 60 ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் புறம்போக்கில் வீடுகள் கட்டி மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதி களும் பெற்றுள்ளனர். மேலும், அரசுக்கும் வரி கட்டி வருகின்றனர்.  இந்நிலையில், வீடுகளை இடிப்பதற்கு முன்பு மாற்று இடம், அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரவேண்டும்” என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.  ஒய்.சந்திரன்