“புரட்சி நடந்தது; புதுமை நிகழ்ந்தது”
தாய் மனிதனை ஈன்றாள்
அந்த மனிதனை மனிதநேயம் உள்ளவனாக்கியது
ரசிய புரட்சி!
‘ஊரையடித்து உலையில் போடு,
உன்னை மட்டுமே நினை’என்ற
மனித விரோதத்திற்கு எதிரான
முதலாளித்துவ சிந்தனைக்கு எதிராக
‘உலகை வாழவைப்போம்,
உலகம் வாழ்ந்திடவே நாம் வாழ்வோம்’ என்ற
மார்க்சியப் பாடத்தை
நடைமுறைப் படுத்தியது
ரசிய புரட்சி!
வறுமையில் மக்களை வாடவிட்டுவிட்டு
வாடிய மக்களையே மூலதனமாக்கி
வளமையோடு வாழ்கிறது முதலாளித்துவம்
வாடியப் பயிர்களைக் கண்டபோது
வாடியதோடு நில்லாமல்
பசிப்பிணி போக்கிட மணிமேகலையின்
அட்சயப் பாத்திரமாய் வந்து நின்றது
ரசிய புரட்சி!
முதலாளித்துவத்தின்
வஞ்சகத்தால், கொடுமையால்
வளைந்து கொடுத்த, வளைந்தே கிடந்த
உழைப்பவனின் முதுகெலும்பை
நிமிர வைத்தது
நவம்பர் புரட்சி!
உழைப்பவனைப் பார்த்து,
“நீ, உழைக்கப் பிறந்தவன் வாழப் பிறந்தவனல்ல என
விதியென்று சதி செய்த முதலாளித்துவத்தின்
வன்மத்தை, வஞ்சத்தை தோலுரித்து
உழைப்பவன்தான் வாழப் பிறந்தவன்
உழைப்பவனே வாழவேண்டுமென
மண்ணைப் பிழந்து வெடிக்கும் பூகம்பமாய்
விண்ணை அதிரவைக்கும் இடி முழக்கமாய்
ஓங்கி முழங்கியது”
நவம்பர் ரசிய புரட்சி!
சாதிவெறியின் தொட்டால் தீட்டு
நிறவெறியின் பார்த்தாலே தீட்டு என்ற
எந்த வெறியும் இல்லாமல்
“யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்ற
வரிகளை வாழ்க்கை நெறியாக்கி
“உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்”
என்ற முழக்கத்தோடு
புதுநெறியில், மார்க்சிய வழியில்
ஒளிபாய்ச்சிய ஒளி விளக்கு
நவம்பர் புரட்சி!
“மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
கேடில்லா நாடு” என
பாட்டில் உண்மையைச்சொன்ன பாரதியின்,
கண்களில் கண்டது
கண்கொள்ளாக் காட்சி
கண்ணில் தெரிவதெல்லாம்
உண்மையோ, சொர்க்கமோவென
வியந்து நின்ற கலைவாணரின்,
தேசம் என்பதெல்லாம் தேசமில்லை
இதுதான் தேசமென மெய்சிலிர்த்து நின்ற
தனது கனவுகள் நினைவாகும்
ரசியாவிலேயே வாழ்ந்து மறைவேனென்ற
தந்தை பெரியாரின்
உன்னதமான தேசம் ரசியா!
ரசியாவின் பெருமை புரட்சி!
மார்க்சியதின் பெருமை தோழர் லெனின்
ஏட்டில் எழுத்தாய் இருந்த மார்க்சியத்தை
நாட்டில் மக்களின் வாழ்க்கையாக்கிக் காட்டிய
தோழர் லெனினை போற்றுவோம்!
உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கைத் தந்த
உலகத்தின் துயர்போக்கிட விடிவெள்ளியாய் எழுந்த
நவம்பர் புரட்சியை மீண்டும் உயிர்ப்பித்திட
சாதி சனாதனத்தை
மதவெறி மிருகத்தனத்தை
முறியடித்து பொதுவுடைமை தேசம் அமைத்திட
சபதமெடுப்போம் தோழர்களே!
வெ.இரவீந்திரபாரதி
சிபிஎம்ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர்,
மத்திய சென்னை மாவட்டம்.