சென்னை, பிப்.27 கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்ட லேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜன வரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணை யில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கி.மீ தூரமும், தமிழகத்தில் 25 கி. மீ தூரமும் உள்ளது. அதாவது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது. 1984-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 1995-ல் முடிக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டிஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்தது.
இதனால் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் கரை சேதம் அடைந்தது. சேதம் அடைந்த கால்வாயை சீரமைக்க தமிழக அரசு ரூ. 24 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஈரோட்டை சேர்ந்த நிறு வனத்திற்கு கால்வாய் சீரமைக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 6.20 கிலோ மீட்டர் தூரம் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் டிசம்பர் மாத கடைசியில் 2 நாட்கள் கொட்டித் தீர்த்த மழையால் கிருஷ்ணா நதி கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் கால்வாய் சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டு தற்போது பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சிற்றப்பாக்கம் தடுப்பணை பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகின்றன. இப்பணிகள் ஏப்ரல் மாதம் கடைசி வரை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே தொடர்ந்து பெய்த பலத்த மழை காரண மாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் போதியஅளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
எனவே ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை தற்போது திறந்து விட வேண்டாம் என்று தமிழக அதிகாரி கள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர். எனவே தற்போது நடந்து வரும் கால்வாய் சீரமைப்பு பணி முடிந்த தும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 31.81 அடியாக பதிவாகியது. 2.193 டி. எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.