சென்னை, மார்ச் 5- சென்னை பெருநகர் தையல் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆவடி பகுதி 14ஆம் ஆண்டுப் பேரவை துணைத் தலைவர் என்.கே.ரவிக்குமார் தலைமையில் ஞாயிறன்று (மார்ச் 5) நடைபெற்றது. கே.கஜேந்திரன் வரவேற்றார். சங்க கொடியை என்.சந்திரசேகர் ஏற்றினார். துணைத் தலைவர் எஸ்.நடேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் பி.கோவிந்தசாமி பேரவையை துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் டி.ராமமூர்த்தி வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.சந்திரசேகரன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். 10ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.ஜான், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.குணசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ம.பூபாலன் பேரவையை நிறைவு செய்து பேசினார். துணைச்செயலாளர் ஜி.எழில் ஆனந்த் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தையல் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் தையல் நலவாரிய பணப்பயன்களை அதிகரிக்க வேண்டும், தமிழக அரசின் இலவச பள்ளி சீருடை தைக்கும் பெண் தையல் தொழிலாளர்களுக்கு பாரபட்சமின்றி அனைவருக்கும் துணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக டி.ராமமூர்த்தி, செயலாளராக ரவிக்குமார், பொருளாளராக அருள்ராஜ் உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.