districts

img

மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் புதுச்சேரி அரசு மீது முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஜன.12- புதுச்சேரியில் மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:- புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமத்தை பெற முதல்கட்ட கடிதத்தை 8 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. முந்தைய துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் இல்லாமல் இடைக்கால அனுமதியை புதுச்சேரி அரசு மதுபான ஆலைகள் உற்பத்தி செய்ய முதற்கட்ட பணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.  8 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சிக்கல் உள்ளதால், இரண்டு தினங்களுக்கு முன்பு கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் வழங்க முடிவு செய்துள்ளது. அதில் 2 மதுபான தொழிற்சாலைகள் காலக்கெடுவை மீறி முன்னதாகவே தேதியிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  ஆண்டும் ரூ.100 கோடிக்கு  மேல்  வியாபாரம் செய்திருந்தால் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி என  கூறியுள்ளனர். புதுச்சேரி அரசு, 8 மதுபான ஆலைகளுக்கான உரிமத்தை  துணைநிலை ஆளுநர் அனுமதி இல்லாமல் தற்காலிக ஒப்புதல் யார் கொடுத்தது என முதலமைச்சர்  தெரிவிக்க வேண்டும்.மதுபான உரிமம் கொடுப்பதற்காக இந்த அரசு செய்துள்ள தில்லுமுல்லு, ஊழல் தொடர்பாக துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியின் அனுமதி பெற்று துணைநிலை ஆளுநரை சந்திக்க உள்ளோம். இவ்விவகாரத்தில் ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டால், அதில் ஆளுநருக்கு தொடர்பு உள்ளதாக தான் அர்த்தம் என்று குறிப்பிட்டார்.  மேலும் மின்துறை அதானி நிறுவனத்திற்கு தாரைவார்க்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்துவோம்  என்றார்.