கடலூர், மே 8- கடலூரில் கொரோனா விதிமுறைகளை மீறி திறந்து வைத்திருந்ததாக 3 கடைகளுக்கு சீல் வைத்தும், 5 கடைகளுக்கு அபராதம் விதித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் நாளுக்குநாள் வேகமாக அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய நடைமுறையாக மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், சில கடைகள் தொடர்ந்து இயங்குவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து கடலூர் நகராட்சி வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் செம்மண்டலம், கோண்டூர் பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இதில், செல்போன் விற்பனைக் கடை, எல்ஐசி பிரிமியம் செலுத்தும் தனியார் மையம், கார் சர்வீஸ் சென்டர் ஆகியவை இயங்குவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதேபோல், செம்மண்டலத்தில் இயங்கி வரும் இனிப்பு கடையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டம் அதிகம் கூடியதால், அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 4 கடைகளுக்கும் 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.