சென்னை, ஏப்.4- கந்தர்வகோட்டை தொகுதியில் விபத்தில் கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு நிதி உதவி செய்த அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னதுறை நன்றி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட முதுகுளம் ஊராட்சி, அச்சுதாபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஐயப்பன் சமீபத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றியல் சிக்கியதில் கால் முறிவுற்றது. அவருக்கு 7முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டி யுள்ளது. தாய், தந்தை இருவரையும் இழந்துள்ள ஐயப்பன் சகோதரர் வீரமணி உதவியுடன் மருத்துவம் பார்த்து வருகிறார். இந்நிலையில், தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ சின்னதுரையிடம் உதவி கேட்டுள்ளார். அந்த இளைஞரின் நிலைமை அறிந்த சின்னதுரை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, ஐயப்பனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்டு, இளைஞர் அணி அறக்கட்டளையின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தார். இதேபோல் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் இருவரும் நிதி உதவி செய்தனர். நிதி உதவி செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து சின்னதுரை எம்எல்ஏ நன்றியை தெரிவித்துக் கொண்டார். புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ வை.முத்துராஜா உடனிருந்தனார்.