districts

img

மதுவின் தீமையை விளக்கும் விழிப்புணர்வு நாடகம்

சென்னை, ஆக. 2- சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பிஓஎல் டெர்மினல்கள் மற்றும்  லூப் வளாகத்துடன் தொடர்புடைய டாங்க் ட்ரக் ஓட்டுநர்கள், கிளீனர்கள் மற்றும் ஒப்பந்த  தொழிலாளர்கள் ஆகியோரைக் கொண்ட பார்வையாளர்கள் பயன்பெற அவர்கள் முன்னிலையில், முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்த, மதுப் பழக்கத்தின் தீமை களை விளக்கும் நாடக நிகழ்ச்சி நடந்தது. 30  நிமிடங்கள் உடைய  இந்த வீதிநாடக நிகழ்ச்சியை திறமை வாய்ந்த தொழில்முறை நாடக கலைஞர்களைத் தன்னகத்தே கொண்ட சென்னை ஆல்ட்டர்நேட் மீடியா சென்ட்டர் குழுவினர் அரங்கேற்றினர். இந்த நாடகத்தின் மூலமாக, மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதால், உண்டாகும் தீமை களும் குடும்பத்தினருக்கு ஏற்படும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஐஓசி தண்டையார்பேட்டை லூப் காம்ப்ளக்சில் தொடங்கி வைத்து பொது மேலாளர் எஸ்.என். விஜயகுமார் பேசுகையில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதன் விளைவாக, சாலை விபத்துகளில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர் என்றும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருமளவில் காயமடைந்தனர் என்றும் தேசிய குற்றவியல் பதிவேடு அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது.

எனவே, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல் ஆரோக்கியமான நல வாழ்வை அமைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். ஆல்ட்டர்நேட் மீடியா சென்ட்டர் குழுவின்  நாடகக் கலைஞர்கள் பங்கேற்று நடித்த இந்த  நாடகத்தில், பாதுகாப்பான வண்டி ஓட்டும்  வழிமுறை, சாலை பாதுகாப்பு விதிகள் ஆகிய வற்றின் முக்கியத்துவத்தை பாத்திரங்கள் மூலம் சுவையாக விளக்கியதோடு மதுபானப்  பழக்கம், எவ்வாறு சமூகத் தீமையாகவும் குடும்பங்களைப் புரட்டிப் போடுகிறது என்பது  குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் பறை இசை, சிலம்பம், ஒயி லாட்டம், கரகம் மற்றும் தெருக்கூத்து  ஆகிய வையும் இடம்பெற்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை  மேலாளர் கவிதா ரவிக்குமார் தலைமையில், ஒப்பந்த தொழிலாளர்கள் மதுப்பழக்கத்தை விட்டு ஆரோக்கிய வாழ்வைப் பேணுவோம்  என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்ட னர்.