ஓசூர், ஏப். 26- ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிப்பு எழுந்துள்ளது.
ஓசூர் மாநகராட்சியில் 90,000 குடியிருப்புகள் உள்ளன. இதில் 36 ஆயிரம் வீடுகளுக்கும் 139 வணிக வளாகங்களுக்கும் ஓசூர் மாநகராட்சியால் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.முன்பு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகித்து வந்ததாகவும் கோடை காலம் துவங்கியது முதலே 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விடப்படுவதாகவும் இணைப்பு பெற்றுள்ள பெரும்பாலானவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இணைப்பு கொடுத்துள்ள 40 சதவீதம் வீடுகளுக்கே குடிநீர் சரிவர வினியோகிக்காத நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்தும், பணம் கொடுத்து டேங்கில் தண்ணீர் வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர். நிறுத்திவைக்கப்பட்ட உத்தரவு
5 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, மத்திகிரி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர் உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அப்போது வீட்டு வரி கட்டணத்தை 2 மடங்காக உயர்த்திய போது திமுக,சிபிஎம் உட்பட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராடியதன் அடிப்படையில் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.மூன்று மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆதாயத்திற்காக ஓசூர் மாநகராட்சி புதிதாக அவசர அவசரமாக 20,000 குடியிருப்புகளுக்கு அம்ருதா திட்டத்தின் கீழ் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இணைப்புகளை வழங்கியது. இணைப்பிற்கு தேவையான குழாய்க்கும்,வேலைக்கான கூலிக்கும் அனைத்து வீடுகளிலும் தனியாக கட்டணத்திற்கு மேல் ஒப்பந்ததாரர்கள் மூலம் வசூலித்துக்கொண்டதுடன் உடைக்கப்பட்ட சாலைகள் சீர்படுத்தப்படாமல் உள்ளது. அம்ருதா திட்டத்தில் வழங்கிய 20000 இணைப்புகளிலும் இதுவரை காற்றுதான் வருகிறது,குடிநீர் வரவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா காலம் என்றும் பார்க்காமால் அக்டோபர் 2020 முதல் 2021 மார்ச் வரை குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தி கட்டு?ம்படி மாநகராட்சி ஆணை பிரப்பித்துள்ளது
கொரோனாவால் மக்கள் தொழில், வேலை, ஊதியம்,வாழ்வாதாரம் இழந்து குடிநீர் கட்டணம் கூட பல மாதங்கள் செலுத்த முடியாத அவலம் நிலவுகிற நேரம் மக்கள் செலுத்தி வந்த மாத கட்டணம் 40 ரூபாயை தற்போது மூன்று மடங்காக உயர்த்தி வீடுகளுக்கு125 ம், வணிக வளாகங்களுக்கு 150 ரூபாயும் உயர்த்தி மாநகராட்சி அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் மாநகராட்சியில் தொழிலாளர்கள் குடும்பங்களே 75 சதவீதத்தினர் உள்ளனர். சிபிஎம் கோரிக்கை பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும் கொரோனா தொற்றாலும் தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் மீது வேலை இழப்பு, சம்பள குறைப்பு தாக்குதல்களை தொடுத்து வருவதால் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மாநகராட்யின் 3 மடங்கு குடிநீர் கட்டண உயர்வு தாங்க முடியாததாகும். அனைத்து பகுதி குடியிருப்போர் நல சங்கங்களும், கடும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவுத்துள்ளனர். கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும், பழைய கட்டணமே தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் வட்டக் குழு சார்பில் செயலாளர் பி.ஜி.மூர்த்தி மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்