சென்னை, அக். 19- சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே சரக்கு முனையத்தில் மகாராஸ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வரும் சரக்குகளை இறக்கும் பணிகளும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் சரக்குகளை ஏற்றும் பணிகளும் நடைபெறுகின்றன. இந்த பணிகளை கண்ணா லாஜிஸ்டிக்ஸ், ஸ்ரீ திருப்பதி பாலாஜி கார்கோ ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றன. இதில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் ரயில்வே காண்ட்ராக்ட் லேபர் யூனியனில் (டிஆர்இயூ, சிஐடியு) இணைந்துள்ளனர். இந்நிலையில் ஒப்பந்த நிறுவனங்கள் திடீரென தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளனர். மேலும் வடமாநில தொழிலாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்தி, இங்குள்ளவர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக தொழிற்சங்கம் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே வட மாநில தொழிலாளர்களை வெளியேற்றி, நீண்டகாலமாக பணியாற்றி வரும் இந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொழிலாளர்கள் புதன்கிழமை (அக். 19) காலை முதல் பணிகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் டிஆர்இயூ செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், பொருளாளர் சரவணன், சிஐடியு ராயபுரம் பகுதி நிர்வாகி டி.வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே சிஐடியு மாநில மையம் தில்லியில் உள்ள ஒப்பந்த அலுவலகத்தின் தலைமை அலுவலக நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியது.