விழுப்புரம், மார்ச் 1- துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் வீரபாண்டி, ஒட்டப்பட்டு, அருணா புரம், கண்டாச்சிபுரம் சாலையை அகலப்படுத்த வேண்டும், தேனூர் கூட்டு சாலை, வீர பாண்டி, வைப்பூர் சாலையை புதுப்பிக்க வேண்டும், வசந்த கிருஷ்ணாபுரம் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வீரபாண்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் வீரபாண்டி டி.ராமமூர்த்தி, தண்டரை என்.செந்தில்முருகன், வசந்த கிருஷ்ணாபுரம் பி.வெங்கடேசன், நாயனூர் எம்.பாபு, அருனாபுரம் டி.கார்த்திகேயன், ஒட்டம்பட்டு ஜி.செந்தில், கோட்டச் செயலாளர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், சு.வேல்மாறன், வட்ட செயலாளர் எஸ்.கணபதி, மாவட்டக் குழு உறுப்பினர் வி. உமாமகேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கற்பகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, 100 நாள் வேலை உடனடியாக வழங்கப்படும், 15 நாட்களுக்குள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், சாலை அகலபடுத்துதல், சாலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிய ளித்தார். இதையடுத்து போராட் டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.