districts

img

சென்ட்ரல் - ராஜீவ்காந்தி மருத்துவமனை இடையே எஸ்கலேட்டருடன் மேம்பாலம்

சென்னை, அக். 7 - சென்ட்ரல் ரயில் நிலையம் -  ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவ மனை இடையே எஸ்கலேட்டருடன்(நகரும்படிக்கட்டு) கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநாடு வலியுறுத்தி உள்ளது. கட்சியின் எழும்பூர் பகுதி 16வது  மாநாடு ஞாயிறன்று (அக்.6) கேரள  சமாஜத்தில் நடைபெற்றது. மாநாட்டில், திடீர் நகர் மக்களுக்கு  வசிக்கும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர  வேண்டும், தட்டாங்குளம் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்  பட்டா தர வேண்டும், கே.பி.பார்க் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், பிரிக்ளின் சாலைக்கு ‘இரட்டைமலை சீனிவாசன்’ பெயரை சூட்ட வேண்டும், அரசுப் பள்ளிகளை மூடுவதை கைவிட்டு, புதியப் பள்ளிகளை திறக்க வேண்டும், ஆர்.கே.புரம் மக்களுக்கு வாரிய குடியிருப்பை விரைந்து ஒதுக்கீடு  செய்ய வேண்டும், எழும்பூர் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதிக்குழு உறுப்பினர்கள் ஏ.நாகராணி தலைமை தாங்க, ஜி.ராஜாமணி செங்கொடியை ஏற்றினார். பி.கே.மூர்த்தி வரவேற்க, வி.சிந்துஜா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். பல்திறன் மாணவர்களை மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம் கவுரவித்தார். வேலை அமைப்பு அறிக்கையை பகுதிச் செயலாளர் கே.முருகனும், வரவு செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் ஜி.புகழேந்தியும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ் வாழ்த்தி பேச, இ.சர்வேசன் நிறைவுரையாற்றினார்.பகுதிக்குழு உறுப்பினர் ஏ.ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார். பகுதிக்குழு தேர்வு 12 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக வே.ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார்.