districts

img

பதவி உயர்வு கேட்டு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அறப்போராட்டம்

சென்னை, மார்ச் 29 - பதவி உயர்வு வழங்கவும், வங்கி தலைவரின் அத்துமீறல்களை தடுக்கவும் கோரி புதனன்று (மார்ச் 29) பிராட்வேயில் உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய கூட்டுறவு வங்கியில் 26 ஊழி யர்களுக்கு உதவி மேலாளர் பதவி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் 10.2.2023 அன்று ஆணையிட்டுள்ளார். அதனை வங்கி நிர்வாகம் அமல்படுத்தவில்லை. எனவே, 26 பேருக்கும், ஏற்கனவே விடுபட்ட 13  ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியாளர் இடமாறுதல், பதவி உயர்வு,  வங்கியில் தளவாடங்கள் கொள்முதல், இதர செலவினங்களில் நடைபெறும் ஊழல் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல், விதிகளை மீறி வங்கியின் அன்றாட நடவடிக்கைகளில் வங்கி தலைவர் தலையிடுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கி தலைமை அலுவலகத்தில் உண்ணாநிலை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை யடுத்து நிர்வாகம் வங்கி வாயில்களை பூட்டி, போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இதனையடுத்து வங்கி வாயிலில்  பதாகைகளுடன் ஊழியர்கள் அறப்போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தி.தமிழரசு, சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 46 உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. 26 ஊழியர்களுக்கு உதவி மேலாளராக பதவி உயர்வு தர பதிவாளர் ஆணையிட்டுள்ளார். ஊழியர்கள் லஞ்சம் தர மறுப்பதால், வங்கியின் தலைவரான மகேஷ் (திமுக) பதவி உயர்வு வழங்க மறுக்கிறார். இதுதொடர்பாக முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர், துறைச் செயலாளர் ஆகியோரிடம் மனு கொடுக்க உள்ளோம்” என்றார். இந்நிலையில் மேலாண்மை இயக்குநர் அமலதாஸ் பேச்சுவார்த்தைக்கு அழைத் தார். இதில்,கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன், இந்திய வங்கி  ஊழியர் சம்மேளன மாநில தலைவர் டி.ரவிக் குமார், சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத் தலைவர் எம்.ராஜகேசி, பொதுச் செயலாளர் கே.கோவிந்தராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் போராட்டம் ஒத்தி  வைக்கப்பட்டது.