சென்னை, ஜூலை 27- செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா (ஜூலை28) நடைபெறுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். இது தவிர போட்டியை காண்பதற்கு ஏராளமான ரசிகர்களும் சென்னை வந்துள்ளனர். இவர்கள் சென்னையிலுள்ள பல்வேறு முக்கிய ஓட்டல்களில் தங்கியுள்ளனர். விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 10 சொகுசு பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. மாமல்லபுரத்திலிருந்து 5 பேருந்துகளும், அடையாறில் இருந்து 5 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. விளையாட்டு வீரர்கள் வசதிக்காக சுற்றுலா தலங்களில் பேருந்துகள நின்று செல்லவும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரம் பகுதியில் ‘சுற்றுலா நட்பு வாகனம்’ என்ற பெயரில் 25 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் புதனன்று தொடங்கி வைத்தார். வெளிநாட்டு வீரர்கள், சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும் போது இன்முகத்துடன் சரியான கட்டணம் வாங்க வேண்டும் என்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
சர்வதேச அளவில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை பொது மக்கள் டிக்கெட் பெற்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்ல வசதியாக மாமல்லபுரத்திற்கு கூடுதலாக மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருவான்மியூர், தாம்பரம் பேருந்து நிலையங்களிலிருந்து அதிகளவில் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.