districts

புதுச்சேரி ஆட்சியை அபகரிக்க பாஜக சதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுச்சேரி, மே 12- புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கைப்பற்ற சதி செய்வதாகவும், அக்கட்சியின் சர்வாதிகார போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சட்டப்பேரவை அமைவதற்கு முன்னதாகவே மத்திய பாஜக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வலுக்கட்டாயமாக தனது ஆட்சியை அமைக்க முயல்கிறது. அதன் வெளிப்பாடுதான் மே 10ஆம் தேதி 3 பாஜகவினரை நியமன எம்எல்ஏவாக நியமித்தது. அன்றைய தினமே இது அரசிதழில் வெளியிடப்பட்டது. பாஜகவுக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. மத்திய பாஜக ஆட்சியில் மாநில உரிமை பறிப்பு, அதிகாரக் குவிப்பு, சர்வாதிகார போக்கு தலைதூக்கியுள்ளன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை பலவீனப்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவது, கூட்டணிக் கட்சிகளை பலவீனப்படுத்தி சொந்த பலத்தை பெருக்கிக் கொள்வதில் வஞ்சகமும், துரோகமும் கொண்ட ஆக்டோபஸ் போன்றது பாஜக. கடந்த ஆட்சியில் அரசின் பரிந்துரையின்றி மூன்று பாஜகவினரை நியமன சட்டமன்ற உறுப்புனர்களாக திணிக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருந்த சூழலில் மத்திய உள்துறை காலியான நியமன எம்எல்ஏ பதவியை உள்நோக்கத்தோடு நியமித்தது. ஆளும்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, நியமன எம்எல்ஏக்களை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தது. தற்போது கூட்டணி தலைவர் என்.ரங்கசாமி முதல்வர் பொறுப்பேற்றவுடன் நோய்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்தப் பின்னணியில் நியமன எம்எல்ஏக்களை பயன்படுத்தியும், மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும் ஆட்சியை பலவந்தமாக கைப்பற்ற பாஜக முயல்கிறது. இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. பாஜகவின் ஜனநாயக விரோத, கூட்டாட்சி முறைக்கு எதிரான செயலை எதிர்த்திட இடதுசாரி, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகிறது. மேலும் முதலமைச்சர் என்.ரங்கசாமிக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கு இடமில்லாமல் தமிழக அரசின் முழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.