districts

அரும்பாக்கம், புளியந்தோப்பில்  லாரி மோதி 3 பேர் பலி

சென்னை, டிச. 9- சென்னையில் நடந்த இருவேறு விபத்துகளில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வியாசர்பாடி பாலகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் நிர்மலா (39). இவர் வால்டாக்ஸ் சாலையில் பிளாட்பாரத்தில் காய்கறி கடை வைத்துள்ளார். வெள்ளிக் கிழமை காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க செல்வதற்காக அவரது நண்பர் சுரேஷ்குமாருடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். புளியந் தோப்பு ஆட்டுத்தொட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ராஜஸ்தானை சேர்ந்த சரக்கு லாரி பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காய மடைந்த நிர்மலா சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேஷ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை யில் வியாழக்கிழமை இரவு நடந்த விபத்தில் வாலிபரும், இளம் பெண்ணும் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் கன்சர்லையா பிரசாத் (30). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபிலொனா (25). இருவரும் சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கலில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். வியாழக்கிழமை இரவு இருவரும் மோட்டார் பைக்கில்  அரும்பாக்கம் 100 அடி சாலை மெட்ரோ ரயில் சந்திப்பில் திரும்பும் போது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இரு வரும் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து காவல் துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பொன்னன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.